Published On:Tuesday, September 3, 2013
Posted by NIsha
பாமகவின் முன்னாள் தலைவர் தீரன், அனிதா குப்புசாமி உள்ளிட்ட பலர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் தீரன் (எ) ராஜேந்திரன், திமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் ஆகியோர் திங்கள்கிழமை அதிமுகவில் இணைந்தனர். இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்தி:- தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்த தீரன் மற்றும் அவரது மகன் குட்டி மணி ஆகியோர் தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதே போல திமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், அவரது கணவர் சீனிவாசன், திமுக-வைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் எம்.பட்டுராஜன் ஆகியோரும் திங்கள்கிழமை ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி மு.மாயாண்டி, இசைக் கலைஞர் அனிதா குப்புசாமி, ஜெயா டி.வி செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதர் நாராயணன் அவரது மனைவி மற்றும் மகனுடன் ஜெயலலிதா முன்னிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக் கொண்டனர்.



