Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha
தமிழ் மக்களின் அவலங்களை அரசியலாக்குவதே சுயநல அரசியல்வாதிகள் இலக்கு - றுசாங்கன் குற்றச்சாட்டு
நாம் ஏன் தேர்தலில் வாக்களிக்கிறோம்? எமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்காக. எதற்காக இந்தப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்கிறோம்? நமது அன்றாடத் தேவைகள், அடிப்படைப் பிரச்சினைகள் முதற்கொண்டு சுபீட்சமான வாழ்வை எமக்கு உறுதிப்படுத்துவதற்காக. ஆனால், கடந்த 60 வருடங்களாக தேர்தல்களில் வாக்குகளை நாம் அவ்வாறு பயன்படுத்தாதன் விளைவே எமது இன்றைய நிலை என்று, ஊடகவியலாளரும், சிகரம் பணிப்பாளரும், வடக்கு மாகாணசபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கடசி வேட்பாளருமான கோடீஸ்வரன் றுஷாங்கன் தெரிவித்தார்.
மானிப்பாய் சாவற்காடு மகாத்மா சனசமூக நிலைய முன்றலில் இன்றைய தினம் (5) நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசு என்பது மக்களுக்கான ஒரு ஆட்சிக் கட்டமைப்பு. அந்த ஆட்சியில் தேர்தல் வாக்குகள் மூலம் நமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து, ஜனநாயக விதிமுறைகளின்படி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பிரதிநிதிகளைக் கொண்ட கட்சி அரசாங்கத்தை அமைக்கிறது.
இவ்வாறு, எமது நலன்களை நிறைவுசெய்வதற்கான பிரதிநிதிகள் மூலம் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே நாம் தேர்தலில் வாக்களிக்கிறோம்.
இலங்கையைப் பொறுத்தவரையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் மூலம் எமது நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்கான பிரதிநிதிகளை நாம் தெரிவுசெய்கிறோம்.
ஆனால், இந்தத் தெரிவை நாம் கடந்த 60 வருட காலமாகச் சரியாக மேற்கொண்டு வந்திருக்கிறோமா?
1977ம் ஆண்டு தேர்தலில் தனிநாடுதான் தீர்வு என்ற கோஷத்துக்கு வாக்களித்து கூட்டணியை அமோக வெற்றிபெறச் செய்து அமிர்தலிங்கம் ஐயாவை வரலாற்றில் முதற்தடவையாக எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கினோம். ஆனால், அவரால் தனிநாட்டையும் உருவாக்க முடியவில்லை, தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவுமில்லை.
பின்னர் அவர் ஆயுதப் போராட்டம்தான் தீர்வு என்று கூறியதன் பிரகாரம்இளைஞர்களை ஆயுதமேந்தத் தூண்டி, பல தசாப்தங்களை நாம் ஆயுதப் போராட்டத்துக்குள் தொலைத்ததுடன், ஏராளமான இளைஞர்கள், யுவதிகளை மட்டுமல்லாது பொதுமக்களையும் சொத்துக்களையும் யுத்தத்தால் இழந்து போனோம்.
2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு வாக்குளிக்குமாறு கோரப்பட்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தமிழ் மக்கள் தெரிவுசெய்தார்கள். ஆனால், தமிழ் மக்களை மீண்டும் ஒரு யுத்தத்துக்குள் இழுத்துச் சென்று முள்ளிவாய்க்கால் வரையில் கொண்டுபோய் விட்ட அந்தப் பிரதிநிதிகள், மக்கள் அநியாயமாக இறக்கும் போது நாட்டை விட்டோடி வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு பின்னர் இங்குவந்து மக்களது அவலங்களையும் துன்பங்களையும் அரசியலாக்கி வாக்கு வேட்டை செய்தனர்.
யுத்தத்துக்குப் பின்னர் நாம் 3 முக்கிய தேர்தல்களை எதிர்கொண்டோம். அப்போதேனும், கடந்தகால பட்டறிவின் அடிப்படையில் வாக்குகளைப் பயன்படுத்தாமல் மீண்டும் உணர்ச்சி உசுப்பேற்றல்களுக்கு இடமளித்தது மட்டுமன்றி எமது வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறோம்.
தற்போது, 1987ம் ஆண்டு எமது பிரச்சினைகளுக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாணசபை முறையை பரீட்சித்துப் பார்ப்பதற்கான தேர்தலை எதிர்கொண்டு நிற்கும் நிலையில், மீண்டும் அதே பழைய தேர்தல்கால உசுப்பேற்றல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இம்முறையேனும் மக்கள் தெளிவான முடிவை எடுக்கவேண்டும். வாக்குகள் மூலம் வாழ்வை மேம்படுத்துவதற்கு எந்தத் தரப்பைத் தெரிவுசெய்யவேண்டும் என்பதை நடைமுறை அனுபவங்களின் மூலம் உணர்ந்து அவர்களை அமோக வெற்றிபெறச்செய்து வாழ்வை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.
2010 பாராளுமன்றத் தேர்தலில் 3 உறுப்பினர்களையே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பெறறிருந்தது. அந்த 3 உறுப்பினர்களுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செய்து முடித்திருக்கும் அபிவிருத்தி திட்டங்களை நாம் உற்று நோக்க வேண்டும்
நாம் எமது மக்களின் வாழ்வாதாரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக மேம்படுத்தும் பொருட்டும், அவர்களுக்கு ஒரு அமைதியான இயல்பான வாழ்க்கையை பெற்றுக் கொடுக்கும் பொருட்டும் இத்தேர்தலில் பங்கெடுத்து இருக்கின்றோம். இனியேனும் இதையுணர்ந்து, இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களையும் வெற்றிபெறச் செய்வீர்களேயானால், உங்கள் வாழ்வு வளம்பெறுவது நிச்சயம் என்றும் தெரிவித்தார்.
இதன்போது அப்பகுதி கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டதுடன் உரிய தீர்வினை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் சுட்டிக்காட்டினார்.


