Headlines
Published On:Sunday, September 8, 2013
Posted by NIsha

இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகரிப்பு



இலங்கையில் இளவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

போதிய அறிவின்மை, குடும்ப பொருளாதார சூழல் போன்றவையே இதற்கான காரணம் என யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி தெரிவித்துள்ளார்.

இளவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மற்றும் ஏறாவூர் பற்று ஆகிய பிரதேச செயலக நிர்வாக பிரிவுகளிலும் யுனிசெப் அமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளில் இளவயது திருமணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் அதிகமாக காணப்படும் பிரதேசங்களிலே இளவயதில் திருமணங்களும் அதிகம் காணப்படுவதாக யுனிசெப் தெரிவிக்கின்றது.

தமது பிரதேசத்தில் பாடசாலை இடைவிலகலுக்கும் சிறுவயது திருமணங்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக குறித்த பிரதேச செயலக அதிகாரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

குடும்பத்தின் ஏழ்மையான சூழல், தந்தையின் மதுப்பாவனை மற்றும் தாயானவர் மத்திய கிழக்குக்கு வேலைக்குப் போவது போன்ற காரணிகள் இப்படியான இளவயது திருமணங்களை அதிகப்படுத்துவதாக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரான துரைசிங்கம் ஜெயசாந்தினி குறிப்பிடுகிறார்.

இளவயது திருமணத்திற்கு சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது குறித்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்முறை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. ஆனால் நடைமுறைச் சிக்கல்களும் சமூக சூழ்நிலையும் அந்த கணவனை தண்டிப்பதற்கு இடமளிப்பதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக உள்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பான தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்ட ஆலோசகரான அருள்வாணி சுதர்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் திருமண சட்டம் 18 வயதுக்கு கீழ் திருமணப்பதிவு செய்வது சட்ட விரோதம் என்கிறது. ஆனால் அதேசமயம், 16 வயதுக்கு மேற்பட்ட பெண் விரும்பும் ஆணுடன் உறவு வைப்பது பாலியல் குற்றமாக கருத முடியாது என்றும் சட்டம் சொல்கிறது.

இந்நிலையில் 18 வயதுக்கு குறைந்த பெண் திருமணம் செய்யத்தான் தடை இருக்கின்றதே தவிர விரும்பும் ஆணுடன் இணைந்து வாழ தடை இல்லை என்றாகிறது. இதுவும் அந்த நடைமுறைச்சிக்கல்களில் குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார்.

About the Author

Posted by NIsha on 1:33 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 1:33 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகரிப்பு"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive