Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வரை யாழ்தேவி! கிளி. ரயில் நிலையம் 16ம் திகதி திறப்பு
சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் ஆறரை மணித்தியாலங்களில் யாழ் தேவி ரயில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்கும். கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் 65 வீதம் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் பாதை எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக கூறிய அவர், 25 வருடங்களுக்குப் பிறகு 15ம் திகதி முதல் கொழும்பிலிருந்து கிளிநொச்சி வரை மூன்று ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையிலான 65 கிலோமீற்றர் தூர ரயில் பாதை நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அநுராதபுரத்திலிருந்து கிளிநொச்சி வரை விசேட ரயிலில் நேற்று பயணம் செய்த அமைச்சர் ஓமந்தை மற்றும் கிளிநொச்சி ரயில் நிலையங்களுக்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார். இங்கு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்திய இர்கொன் நிறுவனத்தினால் வடபகுதிக்கான 25 கிலோ மீற்றர் நீள ரயில் பாதை மீள்நிர்மாணப் பணிகள், சமிக்ஞை விளக்கு வலைப்பின்னல்கள் என்பன துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதைப் பணிகள் பூர்த்தி செய்யப்படும். ஜுலை மாதத்தில் யாழ் தேவி ரயில் காங்கேசன்துறைவரை பயணம் செய்யும். மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. வடபகுதிக்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களுக்கு குறைந்த நேரத்தில் பயணம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வடபகுதி மக்கள் ரயிலிலே அதிகம் விரும்பி பயணித்துள்ளனர். ரயில் சேவை மீண்டும் முழுமையாக ஆரம்பிக்கப்படுவதன் மூலம் பஸ்ஸில் பயணிப்பதை விட நான்கு முதல் ஐந்து மணிநேரம் பயண நேரம் குறைவடைகிறது. வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சகல ரயில் நிலையங்களும் பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் மீள அமைக்கப்பட்டு வருகின்றன. ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான புளியங்குளம், மாங்குளம், முறிகண்டி ரயில் நிலையங்களும் மீள ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி ரயில் நிலையம் கொமர்ஷல் வங்கியின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றார். 

