Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
அரசியல் இலக்கு இல்லாதவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் - ஈ.பி.டி.பி வேட்பாளர் சிறிரங்கேஸ்வரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் இலக்கு இல்லாதவர்கள் என்று ஈ.பி.டி.பிசார்பில் ஐ.ம.சு.முன்னணியின் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஜயாத்துரை சிறிரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
வடமராட்சி வடக்கு நக்கீரன் கலையரங்கில் இன்றைய தினம் இடம்பெற்ற ஈ.பி.டி.பி வேட்பாளர்கள் அறிமுகம் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடமாகாணத்தில் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையில் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.
இவர் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காக ஆற்றியுள்ள பணிகள் அல்லது சேவைகள் தொடர்பாக நாம் ஆராயும் போது எமக்கு கிடைக்கின்ற பதில் ஒன்றுமில்லையென்பதுதான். இந்தநிலையில் விக்னேஸ்வரன் எம் மக்களின் மேம்பாட்டுக்காகவும், இப்பகுதியின் அபிவிருத்திக்காகவும் என்னத்தை செய்தார் என்றும் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்நிலையில், எமது கட்சி தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நீண்டகாலமாக வடமாகாணசபை முறை மூலமே தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுக்க முடியுமென்று கூறிவருகின்ற நிலையில் ஏதோ ஒரு புது விடயத்தை தான் கூறுவது போன்று விக்னேஸ்வரன் தற்போது கூறி வருகின்றார்;.
இன்று சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்காகவோ அல்லது அவர்களது எதிர்காலத்திற்காகவோ என்ன செய்துள்ளார் என்பதையும் இதேபோன்று எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்த விக்னேஸ்வரன் என்னசெய்துள்ளார் என்பதையும் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இதனூடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் இலக்கு இல்லாதவர்கள் என்பதை எமது மக்கள் நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் எமக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையின் கீழ் நிச்சயம் வடமாகாணத்தை சொக்காபுரியாக மாற்றியமைப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன், ஈ.பி.டி.பியின் சார்பில் ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா, ஏனைய வேட்பாளர்களான கந்தசாமி கமலேந்திரன், சுந்தரம் டிவகலாலா ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.


