Headlines
Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாக உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்படும் - யாழில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது பணிப்புரைக்கு அமைவாகவும் உயர்பாதுகாப்பு வலயத்தில் விமானத்தளம் மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்கான காணிகளை தவிர ஏனைய காணிகள்; பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (7) இடம்பெற்ற ஐ.ம.சு.முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த மாகாணசபை ஆட்சி அதிகாரத்தை உங்களிடம் தருவதற்கு தயாராகவிருக்கின்றார். இந்நிலையில் இந்த ஆட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் போனால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடமாகாண மக்களுக்கான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் மகிந்த சிந்தனையூடாக தெளிவாக கூறியுள்ளார். 

இதனிடையே உயர்பாதுகாப்புவலயப் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணிகளில் பலாலி விமானத்தள விஸ்தரிப்பு மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்கான காணிகளை தவிர ஏனைய பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாக மக்களிடம் நிச்சயம் நாம் கையளிப்போம் என்று தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் இதனை செயற்படுத்தக்கூடியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார். 

அத்துடன் விஸ்தரிப்பின் போது பெறப்படும் காணிகளுக்கேற்ற பெறுமதியை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுமெனவும் வடமாகாணத்திலுள்ள காணிகளை அரசு பறிக்கின்றது என்று சிலர் கூறிவரும் நிலையில் இக்காணிகள் வடமாகாணத்தில் இந்திய அமைதிப்படையிருந்த போது எடுத்த காணிகள் என்பதுடன் நாம் அவற்றை படிப்படியாக மக்களிடம் மீண்டும் கையளித்து வருகின்றோம் என்பதுடன் நாம் தமிழ் மக்களின் காணிகளை ஒருஅங்குலமேனும் எடுத்தது இல்லை.

கடந்தகாலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களிலும் ஏனைய தேர்தல்களிலும் வெற்றிபெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பற்றி நீங்கள் நன்கறிவீர்கள். இங்குள்ள பத்திரிகைகள் மக்களுக்கு உண்மையான செய்திகளை வெளியிடுவதில்லை. இந்நிலையில் குறித்த பத்திரிகை நிறுவனங்கள் ஒருபக்க செய்திகளை வெளியிடாமல் எங்களுடைய கருத்துக்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் குறித்த பத்திரிகை நிறுவனங்கள் தமது பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில், சர்வதேச சமூகமும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கடந்த நான்கு வருடகாலமாக வடமாகாணத்தில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

நீங்கள் இந்த இடத்தில் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டில் ஏனைய மாகாணங்களில் மாகாணசபை அதிகாரங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  இதேபோன்று வடமாகாண சபைத் தேர்தல்தான் இதுவரையில் நடத்தப்படாதுள்ளதுடன் அதற்குக் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான் என்றும் சுட்டிக்காட்டினார். 

வடமாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறும் இதனூடாக உங்களுடைய வாழ்வாதாரமும், இப்பகுதியின் அபிவிருத்தியும் மேலொங்க முடியுமென்றும் தெரிவித்தார்.

இதனிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முதலமைச்சர் வேட்பாளர் வடமாகாணத்தைச் சேர்ந்தவரா?.. எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவில்லையென்றும், நான் பலமுறை இங்கு வருகைதந்துள்ள போதிலும் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக ஒரேயொருமுறை இங்கு வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் எமது மக்களின் வாழ்வு அழிக்கப்பட்ட போதிலும், இழக்கப்பட்ட போதிலும் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பணியாற்றியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் விஞ்ஞாபனத்தில் கல்வி, விவசாயம், இந்திய மீனவர்களால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்படாதுள்ளதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள்,  இந்திய மீனவர்களது அத்துமீறலுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குரல் கொடுத்து வரும் அதேவேளை, எமது கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி அவர்கள் 5,000 தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை, அரசபடையிலும் இணைக்கவுள்ளதாகவும் தெரிவித்ததுடன், வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

எனவே வடமாகாண மக்கள் நன்றியுடையவர்களாகவும், சமாதான விரும்பிகளுமாக இருக்கின்றபடியால் இன்றுள்ள அமைதிச் சூழலை பாதுகாக்கும் வகையில் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். 

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.ம.சு.முன்னணியின்; முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா உள்ளிட்ட வேட்பாளர்களும் உடனிருந்தனர்.

About the Author

Posted by NIsha on 8:08 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 8:08 PM. Filed under , . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for " அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாக உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்படும் - யாழில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive