Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha
பிரெஞ்ச் செய்தியாளரை யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள சிரியாவுக்குள் வரவழைத்த பஷார் அசாத்.
பிரெஞ்ச் செய்தியாளரை யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள சிரியாவுக்குள் வரவழைத்த பஷார் அசாத். சிரியா ராணுவம் பொதுமக்கள் மீது கெமிக்கல் ஆயுதங்களை உபயோகித்தது என்ற குற்றச்சாட்டுடன், சிரியா மீது போர்தொடுக்க அமெரிக்காவும், இதர நட்பு நாடுகளுமாக முன்னேற்பாடுகள் செய்துகொண்டிருக்கும் நிலையில், “எமது ராணுவம் கெமிக்கல் ஆயுதங்களை உபயோகிக்கவே இல்லை” என்று கூறியுள்ளார், சிரியா ஜனாதிபதி பஷார் அசாத். “எமது ராணுவத்திடம் கெமிக்கல் ஆயுதம் இருந்தாலும் இருக்கலாம் (இருக்கிறது என்று அர்த்தம்). ஆனால், அதை நிச்சயம் அவர்கள் உபயோகிக்கவில்லை. கெமிக்கல் ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில், எமது ராணுவ வீரர்களும் இருந்தார்கள். உபயோகித்தால் கெமிக்கல் ஆயுதங்களால் தங்களது உயிர்களும் பறிபோகும் என்று தெரிந்துகொண்ட பின்னரும் சிரியா ராணுவ வீரர்கள் கெமிக்கல் ஆயுதங்களை உபயோகித்திருப்பார்களா?” என்றும் கேள்வி எழுப்புகிறார், ஜனாதிபதி பஷார் அசாத் (போட்டோ-1) சிரியாவுக்குள் உள்நாட்டு யுத்தம் மும்மரமாக ஒருபுறமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறமாக அமெரிக்க ஏவுகணைகள் எந்த நிமிடத்திலும் வந்து தாக்கலாம் என்ற சாத்தியம் உள்ள நிலையில், சர்வதேச மீடியாக்கள் இப்போது சிரியாவுக்குள் செல்ல அனுமதி இல்லை. அப்படியான நிலையில், பிரெஞ்ச் பத்திரிகை Le Figaro செய்தியாளருக்கு விசா கொடுத்தது சிரியா அரசு. அது மட்டுமல்ல, Le Figaro செய்தியாளரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து சிறப்பு பேட்டியும் (போட்டோ-2) கொடுத்தார் ஜனாதிபதி பஷார் அசாத். சிரியா மீதான தாக்குதலுக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அனுமதி வழங்காத நிலையில், தற்போது அமெரிக்காவுடன் கூட்டாளியாக மும்மரமாக நிற்பது பிரான்ஸ்தான். அதனால்தான், பிரெஞ்ச் பத்திரிகைக்கு மட்டும் பேட்டி கொடுக்க அசாத் சம்மதித்தார் என்கிறார்கள். எப்படியோ, எந்த நிமிடமும் யுத்தம் தொடங்கலாம் என்ற நிலையில் உள்ள நாட்டின் ஜனாதிபதியின் பிரத்தியேக பேட்டியை பெற்று ஸ்கூப் அடித்திருக்கிறது, Le Figaro. “நான் கெமிக்கல் ஆயுதங்களை உபயோகித்தேன் என்பதற்கு அமெரிக்கா அல்லது பிரான்ஸ் ஏதாவது ஆதாரம் காட்டட்டும் பார்க்கலாம்” என்று பேட்டியில் சவால் விட்டார் ஜனாதிபதி அசாத். “அமெரிக்காவோ, பிரான்ஸோ எம்மீது குற்றம் சுமத்துவது சுலபம். ஆனால், அதை நிரூபிக்க முடியுமா? அது, அவ்வளவு சுலபமல்ல. காரணம் அவர்களிடமே எந்த ஆதாரமும் கிடையாது” “அமெரிக்க, பிரெஞ்ச் ஜனாதிபதிகள் எமக்கு ஆதாரம் காட்ட வேண்டாம். அவர்களது சொந்த நாடுகளிலேயே மக்கள் கேள்வி கேட்கிறார்களே.. “எதற்காக சிரியா மீது தாக்குதல்?” என்று கேட்கிறார்களே… அமெரிக்க, பிரெஞ்ச் மக்களுக்காவது, அமெரிக்க, பிரெஞ்ச் ஜனாதிபதிகள் சிரியா ராணுவம் கெமிகல் ஆயுதங்களை உபயோகித்தது என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டாமா?” என்றும் கேள்வி எழுப்பினார் அவர். ஜனாதிபதி அசாத்தின் இந்தப் பேட்டி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. கீழே லிங்கில் உள்ள போட்டோக்களின் முதல் இரு போட்டோக்களும், இந்தப் பேட்டியின்போது எடுக்கப்பட்டவை. மீதி 5 போட்டோக்களும், சிரியா கெமிக்கல் ஆயுத தாக்குதல் நடத்தியது என்று கூற மேலை நாட்டு மீடியாக்கள் உபயோகிக்கும் போட்டோக்கள். ‘கெமிக்கல் ஆயுத தாக்குதல்’ என்று கூறப்பட்ட சம்பவத்தில் கொல்லப்பட்ட மக்களின் ஒரு பகுதியினரை (சகிக்க முடியாத போட்டோ அல்ல) 3-வது 4-வது போட்டோக்களிலும், அந்த தாக்குதலின்போது கெமிக்கல் ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டனவா என பரிசோதனை செய்வதை, 5-வது, 6-வது போட்டோக்களிலும் பாருங்கள். இந்த போட்டோக்களை வைத்து, சிரியாவில் நடந்தது கெமிக்கல் ஆயுத தாக்குதல்தான் என ஒபாமாவும், அவரது துணை ஜனாதிபதியும், உயர் அதிகாரிகளும் முடிவு செய்த ஆலோசனை கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோ, 7-வதாக உள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு நிஜத்தின் வெளிப்பாடா, அல்லது பக்கா அரசியலா என்பது, ஒருவேளை சிரியா மீது அமெரிக்கா போர் தொடுத்தால், அதன் பின்னரே தெரியவரும் (ஈராக்கில் தெரியவந்தது போல!) போட்டோக்களுக்கான லிங்க் கீழேயுள்ளது.



